மக்கள் எழுச்சியை ஒடுக்குவதற்கு அரசு, அரச பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது. ஆனாலும் மக்கள் சக்தியின் முன்னால் நிச்சயம் மண்டியிடவேண்டிவரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆசியுடனேயே நாம் ஆட்சிக்கு வருவோம். ஆள் மாற்றம் ஊடாக அதனை செய்யமாட்டோம்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த நிலையிலும், அரசின் ஜனநாயக விரோதச்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் சுதந்திர சதுக்கத்துக்கு முன்னால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் பாதுகாப்பு சட்டத்தை அரசு துஷ்பிரயோகம் செய்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளையும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. போராடும் மற்றும் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளன.
மக்களின் நிலைப்பாட்டை – எதிர்ப்பை தடுப்பதற்காக அவசரகால நிலை மற்றும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது மக்கள் எழுச்சியை தடுக்க அரச பயங்கரவாதம் கையாளப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டுக்கு இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்புடையவை அல்ல. என்னதான் செய்தாலும் மக்கள் சக்திக்கு முன்னால் மண்டியிட வேண்டிவரும் என்றார்.
அதேவேளை, ஊரடங்கு உத்தரவைமீறி நாட்டில் பல பகுதிகளில் நேற்று போராட்டங்கள் வெடித்தன.
Discussion about this post