ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசு பதவி விலக வேண்டுமென மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அந்த கோரிக்கையை ஏற்காது – அரசை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் புதிய அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (18) நியமித்துள்ளார்.
அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதியும், பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் அமைச்சரவையில் நீடிக்கின்றனர். ஏனைய மூன்று ராஜபக்சக்களும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி புதிய அமைச்சரவையில் பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எவ்வித பொறுப்பும் கையளிக்கப்படவில்லை.
இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்ட மொட்டு கட்சியின் 11 பேர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டுக்கும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
தினேஷ் குணவர்தன, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க , திலும் அமுனுகம ஆகியோரைதவிர, கடந்த அமைச்சரவையில் இருந்த எவரும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீடிக்கின்றனர். நீதி அமைச்சு பதவியும் சப்ரியிடம் கையளிக்கப்படலாம்.
காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்தன, சரத் வீரசேகர, டலஸ் அழகப்பெரும, பவித்ராதேவி வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பதவியேற்க விரும்பவில்லை. அவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவும் இல்லை.
அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. ஆளுங்கட்சியின் 5 இற்கும் மேற்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post