போதைப் பொருள் பயன்படுத்தும் பஸ் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஐஸ் போதை மாத்திரை மற்றும் ஏனைய போதைப் பொருள்களை பயன்படுத்தியவாறு போக்குவரத்து பஸ் சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துநர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கண்டறிவதற்கு விசேட கருவியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சந்தேகத்துக்கு இடமான சாரதிகள் மற்றும் பஸ் நடத்துநர்கள் சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதனைக்கு உட்படுத்தி அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான 27 பேர் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் நீண்ட நாள்களாக போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
பஸ் சாரதிகள் மட்டுமன்றி தலைநகரைச் சேர்ந்த செல்வந்த இளைஞர், யுவதிகளும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post