பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய செயற்படுமாறு சட்ட மாஅதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சட்ட மாஅதிபரின் ஆலோசனை கோரி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சட்ட மாஅதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். இந்த விடயம் குறித்து செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகரும் உறுதிப்படுத்தியுள்ளார். சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீண்ட ஆலோசனை அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடுவதற்கு எவ்வித சட்ட அடிப்படைகளும் இல்லை என சபாநாயகர் கூறியுள்ளார். பொலிஸ் மாஅதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி, சிவில் தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அவர் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது. அத்துடன் அரசியலமைப்பிற்கமைய, பதில் பொலிஸ் மாஅதிபரை நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியது. எவ்வாறாயினும், பொலிஸ் மாஅதிபர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரும் பிரதம நீதியரசரும் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post