இலங்கையின் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர், நீதி அமைச்சர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு மாறாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்படுவோரைத் தற்காலிகமாக இரகசியக் காவலில் வைத்திருப்பதற்கான நிர்வாக நடைமுறையின் சட்டபூர்வத் தன்மையை மனுதாரர்கள் சவாலுக்குட்படுத்தியுள்ளனர்.
தமது அடையாளத்தைக் காட்டாத, பொலிஸாருக்குச் சொந்தமானது என்று அடையாளம் காணப்படாத வாகனங்களில் போராட்டக்காரர்கள் அழைத்துச் செல்லப்படுவதுடன், சில நேரங்களில் நீதிவான் ஒருவரிடம் முற்படுத்தாமல் பல மணிநேரம் அடையாளம் தெரியாத இடங்களில் அவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளர் மிராக் ரஹீம் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
Discussion about this post