பாணந்துறையில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் பொலிஸாரைத் தாக்கி சீருடையை கிழித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் செயலாளர் என கூறப்படும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பாணந்துறை வடக்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சீருடையை கிழித்து கடுமையான வார்த்தைகளால் தாக்கிவிட்டு ஓட முயன்றதாக அவர் மீது பாணந்துறை பொலிஸாரினால் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை ஆதார மருத்துவமனை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மது அருந்தியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறைப்பிரதேசத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு கான்ஸ்டபிள்கள், பாணந்துறை பழைய வீதி ஜூபிலி சந்தியில் பிரதான வீதியை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீரென்று நிறுத்தப்பட்டு, பின்னோக்கி நகர்ந்து மீண்டும் வந்த வழியே அதிவேகமாகத் திரும்பிச் செல்வதைக் கண்டுள்ளனர்.
அதனையடுத்து , அந்த முச்சக்கரவண்டியை துரத்திச் சென்றுள்ளனர்.
பாணந்துறையை நோக்கிய ஒரு குறுக்கு வீதியொன்றில் குறித்த சந்தேகத்துக்குரிய முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
பொலிஸார் சந்தேக நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காட்டுமாறு கேட்ட வேளையில் சாரதி அதனை மறுத்துள்ளார்.
அதனையடுத்து முச்சக்கர வண்டியின் சாவியை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெற முற்பட்ட போது, முச்சக்கர வண்டி சாரதி பொலிஸ் உத்தியோகத்தரைப் பிடித்து பலமாக தள்ளிவிட்டுள்ளார்.
தரையில் வீழ்ந்து காயமடைந்த அவரை மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் தூக்கிவிட்டுள்ளார். அந்தத் தாக்குதலில் கான்ஸ்டபிளின் சீருடை கிழிந்து பல இரும்பு பொத்தான்கள் தூக்கி கழன்று வீழ்ந்திருந்தன.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சந்தேக நபரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post