பொருளாதார நெருக்கடிக்கு தாம் காரணமில்லை என்பதை காண்பிக்கும் வகையில் ஆளும் தரப்பினர் நாட்டை வலம் வருகிறார்கள். கோத்தாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, எஸ்.ஆர். ஆட்டிக்கல, லக்ஸ்மன் மற்றும் கப்ரால் ஆகியோரே நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு முதனிலை பொறுப்புதாரிகள்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமது குறைகளை மறைத்து கொள்ள பிறரை விமர்சிப்பது நகைப்புக்குரியதாகும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனையால் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பலவீனமடைந்தார் எனக்கூறி ஆளும் தரப்பினர்கள் நாட்டை வலம் வருகின்றனர்.
நாவலபிடி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்திலும் இவ்வாறே அவர்கள் கூறினார்கள்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் விவசாயத்துறை அமைச்சு பதவி வகித்தவர் தான் கோத்தாபய ராஜபக்சவை இரசாயன உரம் மற்றும் சேதன பசளை விவகாரத்தில் தவறாக வழிநடத்தினார்.
இரசாயன உரத்தைத் தடை செய்து, ஒரே கட்டமாக சேதன பசளை திட்டத்தை செயற்படுத்த முடியாது என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர்கள் ஆலோசனை வழங்கிய போது விவசாயத்துறை அமைச்சர் அவர்களை பதவி விலக்கி, சேதனப் பசளை திட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என ஜனாதிபதியைத் தவறாக வழிநடத்தினார்.
தற்போது இவர் பிறரே ஜனாதிபதியை ஏமாற்றினார்கள் என குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணாவிட்டால் நாட்டு மக்கள் மேலும் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் செயற்படுவதை காண முடிகிறது.
வட்டி மற்றும் வரி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். நாட்டில் பெரும்பாலான தொழிற்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றார்.
Discussion about this post