குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொது நபரைத் தாக்கிய சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், அந்த இராணுவ அதிகாரி மீது இராணுவத்தால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தைச் சேர்ந்த இருவர் ஒருவரைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தபோது, ஒருவர் அந்த நபரை எட்டி உதைக்கும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது.
தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரி லெப். கேணல் தரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு குழப்பி இடையூறு செய்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு அந்தக் குழு இடையூறு விளைவித்தது என்றும், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு காரணமாக இருந்தது என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரண்டு சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளது என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post