பொசன் பூரணை தினம் இன்றாகும்.
மஹிந்த தேரர் வருகை தந்து 2332 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புத்த பகவான் பரிநிர்வாணம் அடைந்து 2188 வருடங்கள் கடந்த நிலையில், அசோக மன்னனின் தலைமையில் நடைபெற்ற மூன்றாவது தர்ம மாநாட்டை அடுத்து ஒன்பது நாடுகளில் பௌத்த தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது.
இதற்கமைய, பொசன் பூரணை தினத்தில் மஹிந்த தேரர் தலைமையிலான தர்ம தூதுக்குழுவினர் அனுராதபுரம் மிஹிந்தலைக்கு வருகை தந்து இலங்கையை ஆண்ட தேவநம்பியதீச மன்னனுக்கு பௌத்த தர்மத்தை போதித்ததாக பௌத்த வரலாறு கூறுகிறது.
இந்தக் குழுவினர் இலங்கையில் பௌத்த தர்மத்தை ஸ்தாபித்ததை அடுத்து நாட்டின் சமய, சமூக, கலாசார ரீதியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 18 கலைகளில் நிபுணத்துவம்பெற்ற சங்கமித்தை உள்ளிட்ட குழுவினர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்ததை அடுத்து, மேலும் சில மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டன.
இதனையடுத்து, இலங்கையில் பௌத்த தர்மத்துடன் தொடர்புடைய கலாசாரமும் நீர்ப்பாசனக் கட்டமைப்பும் விவசாயத்தை மையமாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பும் வலுப்பெற்றது.
இந்த ஆண்டு தேசிய பொசன் பூரணை நிகழ்வு, மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றது.
இந்தற்கமைய, மிஹிந்தலை புனித பூமியில் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுள்ளன.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்த்து, அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
பொசன் பூரணையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌத்த தர்மத்தை பாதுகாத்து வளர்ப்பதற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு உரிய முறையில் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த தேரரின் மகத்தான தரிசனத்தின் ஊடாக இலங்கை மக்கள் வளம் பெற்றுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
புத்த பெருமான் போதித்த தர்மத்தை ஏற்று நாட்டில் நியாயமான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொசன் பூரணை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பொசன் பூரணையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹல் தல்துவ தெரிவித்தார்.
பொசன் பூரணையை முன்னிட்டு விஹாரைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 18,207 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சுமார் 4000 பொது சுகாதார பரிசோதகர்கள், தானசாலைகள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் K.A.P. பொரலெஸ்ஸ தெரிவித்தார்.
பொசன் பூரணையை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள, சிறு குற்றங்களுக்காக தண்டனை பெறும் கைதிகள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மிஹிந்தலை, அநுராதபுரம் மற்றும் தந்திரிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுள்ளன.
இன்றும் நாளையும் 400 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
சிதுல்பவ்வையை மையப்படுத்தி விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த காலப்பகுதியில் மேலதிக ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அநுராதபுரத்திற்கு செல்லும் மக்களின் நன்மை கருதி மஹவ ரயில் நிலையம் வரை மேலதிக ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தில் பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார்.
Discussion about this post