அரச செயலொழுங்குக்கு பெரும் நிதி சுமையாக உள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கையை செயற்படுத்த நாடாளுமன்றம் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
தேசிய பொருளாதாரத்துக்கு இந்த நிறுவனம் பெரும் அழுத்தத்தை பிரயோகிக்கிறது என கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் கோப் குழுவின் இரண்டாம் அறிக்கையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கோப் குழுவின் இரண்டாவது அறிக்கையில் கால்பந்து சம்மேளனம், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், தேசிய வீடமைப்பு அதிகார சபை, தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம், இலங்கை போக்குவரத்து சபை ஆகிய அரச நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கோப் குழு விசாரணையில் ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவை அர செயலொழுங்குக்குப் பெரும் சுமையாக உள்ளதுடன்,தேசிய பொருளாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள விசேட மூன்று உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கை, நிதி திட்டமிடல் மற்றும் எதிர்கால வியாபார நடவடிக்கைகள் உள்ளிட்ட மூன்று விடயங்கள் இந்த விசாரணைக்குள் உட்படுத்தப்பட்டன.
இந்த மூன்று விசேட உபகுழுககள் ஊடாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தொடர்பில் நாடாளுமன்றம் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
இந்த நிறுவனம் தேசிய பொருளாதாரத்துக்கு பிரயோகிக்கும் அழுத்தம் தொடர்பில் நாடாளுமன்றம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
Discussion about this post