பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சின் செயலாளரினால் கடந்த மே 21 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து உயர்நீதிமன்றம் இன்று(04) இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.
இது தொடர்பான மனு காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று விதிக்கப்பட்ட இந்த இடைக்கால தடையுத்தரவு மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரை நடைமுறையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சரினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முரணானது என்பதால் அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 21 நிறுவனங்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த 03 ஆம் திகதி ஆராய்ந்து விசாரணைக்கான அனுமதியை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பியிருந்தது.
எனினும், தொழில் அமைச்சரினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது எனவும் தொழில் அமைச்சரினால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறும் உத்தரவிடக்கோரி பெருந்தோட்ட நிறுவனங்களினால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீதான அடுத்தக் கட்ட விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ரொமேஷ் டி சில்வாவும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவும் ஆஜராகியிருந்தனர்.
இலங்கை தோட்ட தொழிலாளர்களின் சங்கம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
Discussion about this post