போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இளைஞர்களையும் நினைவுகூர வேண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற டிலான் பெரேரா கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
” போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் நாள் இன்று (19). படையினரை நினைவு கூர்ந்து அவர்களை கௌரவப்படுத்தும் அதேவேளை, தவறான வழியிலேனும் பயணித்து புலிகள் அமைப்பில் இணைந்த தமிழ் இளைஞர்களையும் நாம் நினைவுகூர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. ” – எனவும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, இலங்கையில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
” புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என ஏப்ரல் மாதம் முதல் வலியுறுத்தி வந்தேன். சபாநாயகரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தேன். பிரதமர் பதவி விலகாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினேன்.
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படியெல்லாம் நடந்துதான் பிரதமர் பதவி விலகினால், சிலவேளை காலை 9 மணிக்கு பிரதமர் பதவி விலகியிருந்தால்கூட வன்முறை வெடித்திருக்காது.
பிரதமராக ரணில் தெரிவாகியுள்ளார். அவரை கடுமையான விமர்சித்தவன் நான். ஆனால் சர்வதேச ஒத்துழைப்பை பெறக்கூடிய நபர் அவர். எனவே, அவருக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post