புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதான தடையை நீக்கியுள்ளது. இது தொடர்பில் கருத்துக் கேட்டபோதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது நல்லதொரு விடயம். அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் மீள் எழுச்சிக்குப் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியம்.
இதனை உணர்ந்து சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. நாட்டின் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம்.
அதேவேளை, தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலும் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களுடன் இலங்கை அரசு நெருக்கமாகப் பேசி நாட்டுக்காக அவர்களின் உதவிகளைப் பெற வேண்டும் என்றார்.
Discussion about this post