புதிய பிரதமர் உள்ளடங்கலாக இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பதில் ஜனாதிபதியாக சபாநாயகரை நியமிப்பதற்கும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை என்பனகூட போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் நாட்டின் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கும், அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுப்பதற்காகவும் சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
சில கட்சி தலைவர்கள் நேரிலும், மேலும் சிலர் காணொளி ஊடாகவும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கூட்டி, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும்வரை பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் செயற்படுவார்.
ஒரு வார காலத்துக்குள் இடைக்கால சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தலுக்கான கால எல்லையும் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி இடைக்கால அரசமைய, பிரதமர் பதவியில் இருந்து விலக தான் தயார் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
Discussion about this post