இலங்கையில் புதிதாக பதவியேற்கவுள்ள ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா கலந்துரையாடும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே உயர்ஸ்தானிகர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே 4 பில்லியன் டொலர் வரை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் கூடுதல் முதலீடுகளை இலங்கைக்கு இந்தியா அறிமுகம் செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தற்போதைய நெருக்கடி நிலை விரைவில் மாறிவிடும் என கோபால் பாக்லே நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
ஜனநாயக அடிப்படையில் தற்போதைய சிக்கலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, இலங்கையுடன் உரையாடியதாகவும் இலங்கையுடனான உறவுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இலங்கை தமிழர்கள் தொடர்பாக அவருடன் கலந்துரையாடவுள்ளதாவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
சரியான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தமே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியிலும் இலங்கை முழுவதிலும் வளர்ச்சி ஏற்பட தொடர்ந்து இந்தியாவின் ஆதரவு இருக்கும் எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post