புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்கக்கூடாது
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மற்றும் தமிழ்
தேசியக் கூட்டமைப்பு இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என
அறிவிக்கப்பட்டு, பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் பிறிதொரு
தினத்தில் அந்த சந்திப்பு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த சந்திப்பை நடத்துவதற்கான திகதி, மீள நிர்ணயிக்கப்படும் என
அறிவித்து இரண்டு கடிதங்கள் அதன் பின்னர் தமக்கு கிடைத்ததாக
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கு பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் தாங்கள்
விரும்புகின்ற போது சந்திப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் இரா.சம்பந்தன்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அது
போதாதென கருதி 1988 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, காத்திரமான அதிகார பரவலாக்கலை
ஏற்படுத்துவதற்காக 13 ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்த இணங்கியதுடன்
அதற்காக பெருமளவு கருத்தொருமைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரா.சம்பந்தன்
நினைவுபடுத்தியுள்ளார்.
1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு தயாரிப்பிற்கு முறையே 2
வருடங்களும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தை எடுத்தபோதிலும், தற்போதைய
நடைமுறை கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த நடைமுறை இனிமேலும் தாமதிக்கப்படாது என உறுதிப்படுத்துமாறு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post