புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட பை ஒன்றில் இருந்து 5 மில்லியன் மதிப்பிலான நகைகள் கண்டெடுக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த பையை பயணி ஒருவர் விட்டுச் சென்றுள்ளனர். பயண முடிவின் பின்னர் மாளிகாவத்தை புகையிரத வீதிக்கு புகையிரதம் திரும்பிய வேளை அதனை பரிசோதித்த புகையிரதப் பாதுகாப்பு அதிகாரிகள் நகைகள் இருந்த பையை கண்டெடுத்துள்ளனர்.
புகையிரதத்தில் பயணித்த கண்டியைச் சேர்ந்த தம்பதியினரே குறித்த பையை தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த தம்பதியினர் பல பைகளுடன் புகையிரதத்தில் பயணித்ததாகவும், ஆசனத்திற்கு அடியில் வைக்கப்பட்டிருந்ததால் நகைகள் இருந்த பையை விட்டுவிட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நகைகள் மாத்திரமல்லாது, குறித்த பையில் அப்பிள் ஐபோன், ரூ.3.5 மில்லியன் சேமிப்பு சான்றிதழ், வங்கி புத்தகங்கள், கார் திறப்பு மற்றும் அடையாள ஆவணங்கள் என்பனவும் அதில் இருந்ததாக உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பையானது உரிய விசாரைணகள் மற்றும் சரியான அடையாளம் காணலின் பின்னர் உரிய தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post