பிரித்தானியாவில் புதிய அரசை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவா் கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அமோக வெற்றியை பதிவு செய்தது.
இதற்கமைய 14 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை தழுவியுள்ளது.
இதன் பிரகாரம் தொழிற்கட்சியின் கியர் ஸ்டாா்மா் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் நாடு முழுவதும் 40 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆட்சி அமைக்க 326 ஆசனங்கள் தேவையான நிலையில் தொழிற்கட்சி 410 ஆசனங்களை கைப்பற்றியதுடன் கன்சர்வேட்டிவ் கட்சியினால் 119 ஆசனங்களையே வெல்ல முடிந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட கியர் ஸ்டார்மர் மாற்றம் ஆரம்பமானது என கூறியுள்ளார்.
நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட புதிய சகாப்தத்துக்கு இட்டுச் செல்வதாக அவர் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
61 வயதான சேர்.கியர் ஸ்டார்மர் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதுடன் மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணராகவும் திகழ்ந்தார்.
2015 ஆம் ஆண்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான கியர் ஸ்டார்மர் 2020 ஆம் ஆண்டிலிருந்து எதிக்ர்கட்சி தலைவராகவுள்ளார்.
இம்முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கிய அவர் வாராந்தம் 40 ஆயிரம் கூடுதல் பார்வை நேரங்களை அளித்து தேசிய சுகாதார சேவையின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதாக உறுதியளித்தார்.
அத்துடன், எல்லைப் பாதுகாப்புப் பேரவை அமைத்து சிறிய படகுகள் மூலம் எல்லை தாண்டி மக்களை கடத்தும் குழுக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு வழக்கப்படி தமது இராஜிமா குறித்து மன்னருக்கு அறிவிப்பதற்காக ரிஷி சூனக் இன்று(05) பக்கிங்ஹாம் மாளிகைக்கு செல்லவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் உள்ளிட்ட பலரும் தமது ஆசனங்களை இழந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Discussion about this post