பிரபாகரனின் தாயார் சிகிச்சை பெறுவதற்காக திருச்சிக்கு வந்த போது சில அரசியல் நாடகங்களால் அவர் திருப்பி அனுப்பபட்டதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பார்வதி அம்மாள் திருச்சிக்கு சென்று சிகிச்சை எடுப்பதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் பார்வதி அம்மாவை அழைத்து வர பழ.நெடுமாறன், வைகோ உட்பட சிலர் விமான நிலயத்திற்கு சென்றதால் உளவு துறை உள்ளிட்டவர்களுக்கு விடயம் தெரிந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டு பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டார்.
இவர்கள் தங்களை விளம்பரபடுத்திக்கொள்ள அவரை வரவேற்க சென்றனர். இவர்கள் இவ்வாறு செய்யவில்லை என்றால் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற்று சென்றிருப்பார்.
இதனை தொடர்ந்து அவர் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் தெரிந்து கலைஞர்,“பார்வதி அம்மாள் வந்தது தெரியாது என்னிடம் சொல்லி இருந்தால் நான் அவரிற்கு எல்லாம் செய்து கொடுத்திருப்பேன்.” என அறிக்கை வெளியிட்டார்.
இதன் பின்னர் கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரி ஒருவர்,“எனது தாயாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.அதற்கு இந்தியாவில் அனுமதி வழங்க வேண்டும்.” என முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்த கடிதம் என் மூலமாக தான் முதல்வருக்கு அனுப்ப கிடைத்தது. இதற்காக நாம் சீமானை நாடிய போது அவர்,“நான் இப்பொழுது தான் மதுரை விமான நிலையத்திற்கு வந்தேன். இரண்டு நாள் அந்த கடிதத்தை வைத்திருங்கள் பிறகு முதல்வரிடம் கொடுக்கலாம்.” என சொன்னார்.
என்னால் இரண்டு நாள் காத்திருக்க முடியாது என கனிமொழியின் உதவியுடன் முதல்வரிடம் அந்த கடிதத்தை வழங்கினோம். ஆனால் கலைஞர் அந்த அம்மாவே கடிதம் எழுதினால் தான் அனுமதி வழங்க முடியும் என சொன்னார்.
அதன் பின்னர் பார்வதி அம்மாள் மறுபடி கடிதம் எழுதி கைநாட்டு வைத்து அனுப்பினார். அதை ஏற்று கலைஞர் சிகிச்சை பெற அனுமதி வழங்கினார்.
இதற்குள் நெடுமாறன் மற்றும் வைகோ கலைஞரிடம் கடிதம் சென்றால் அனுமதி கிடைக்கும் என தெரிந்து இலங்கையில் சிவாஜிலிங்கத்திடம் கூறி பார்வதி அம்மாளை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற வைத்தனர்.
அந்த காலக்கட்டத்தில் இலங்கை அரசாங்கம் உணவு மற்றும் மருத்துவ வசதிகளை நிறுத்தி வைத்ததால் அவருக்கு ஒழுங்கான சிகிச்சை கிடைக்காமல் சில மாதங்களில் உயிரிழந்தார்.
ஆனால் அவர் இந்தியாவில் சிகிச்சை பெற்றிருந்தால் இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பார். இதில் அரசியல் காட்சிகள் அவர்கள் சுயலாபதிற்காக செயற்பட்டமை அந்த தயாரிற்கு இழைத்த துரோகமே.” என கூறியுள்ளார்.
Discussion about this post