இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு கிட்டிய வாய்ப்பு, மீண்டுமொருமுறை தவறவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
பிரதி சபாநாயகராக இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலகியதால், நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு முதல் விடயமாக நடைபெற்றது.
இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி குமாரி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்மொழிய, அதனை எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற அஜித் ராஜபக்சவின் பெயரை, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரேரித்தார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதால், அதற்கு சுதந்திரக்கட்சி, 10 கட்சிகளின் கூட்டணி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
வாக்கெடுப்பின்றி, இணக்கப்பாட்டுடன் பிரதி சபாநாயகர் தெரிவுசெய்யப்பட வேண்டும், எனவே, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி முடிவொன்றை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதில் இணக்கப்பாடு எட்டப்படாமையால் இறுதியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அஜித் ராஜபக்சவுக்கு 109 வாக்குகளும், ரோஹினி குமாரி கவிரத்ன 78 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற அஜித் ராஜபக்ச சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.
Discussion about this post