கடன் மறுசீரமைப்பு நிபந்தனைகளை இலங்கையும் பிணைமுறி உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக லண்டன் பங்குச்சந்தை ஆவணமொன்று வௌிப்படுத்தியுள்ளது. இலங்கை அதன் சர்வதேச இறையாண்மை முறிகள் தொடர்பில், பிணைமுறி உரிமையாளர்கள் குழுவொன்றுடன் ஜூன் 21ஆம் திகதி முதல் ஜூலை 2ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அறிவித்துள்ளது. இந்த குழு, இலங்கையின் 50 வீதமான சர்வதேச இறையாண்மை முறிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதானமான பிணைமுறி உரிமையாளர்களை உள்ளடக்கியுள்ளது. இந்த கலந்துரையாடல்களில் சட்டம் மற்றும் நிதியியல் ஆலோசனை நிறுவனங்களான Clifford Chance LLP, Lazard, White & Case, Rothschild & Co. ஆகியனவும் கலந்துகொண்டிருந்தன. சர்வதேச இறையாண்மை முறிகளை மறுசீரமைப்பதற்கான இணைந்த நிதியியல் நிபந்தனைகளுக்கும் பிணைமுறிகளை நிர்வகிப்பதை உள்ளடக்கிய இணைந்த செயற்றிட்டத்திற்கும் இந்த கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடன் உறுதிப்பாட்டுடன் தொடர்புடைய ஸ்திரத்தன்மைக்காக, இலங்கையின் உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்கள் குழுவும் சர்வதேச நாணய நிதிய ஊழியர்களும் இந்த செயற்றிட்டத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இணைந்த செயற்றிட்டத்தின் கீழ், தற்போதுள்ள பிணைமுறி தொகையில் 28 வீதத்தை குறைப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. இதேவேளை 12 பில்லியன் டொலர் பிணைமுறிகளை மறுசீரமைப்பதற்கான நிபந்தனைகளுடன் இலங்கையும் கடன் வழங்குநர்களும் இணங்கியுள்ளதாக புளூம்பேர்க் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. இது இலங்கை வங்குரோத்து அடைந்து 2 வருடங்களுக்கு பின்னர், கடன் மறுசீரமைப்பின் இறுதிக் கட்டத்திற்கு அதனை கொண்டுசென்றுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார செயற்றிறன்கள் மற்றும் செயற்பாட்டு பொறிமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய செயற்றிட்டத்திற்கான உடன்படிக்கைக்கு இலங்கையும் பிணைமுறி உரிமையாளர்களும் இணங்கியுள்ளதாகவும் புளூம்பேர்க் தெரிவித்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் கட்டத்தின் நிறைவில் வௌியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய இந்த தகவலை வௌியிடுவதாக புளூம்பேர்க் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post