அரசமைப்பின் 22 ஆவது திருத்தம், முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்சவின் தலையீட்டின் காரணமாகவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தில் இருந்து இனியும் எந்த நன்மையான விடயங்களையும் எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
ருவன்வெல்ல தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
22 ஆவது அரசமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று முழு நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. 22 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.
ஆனால் என்ன நடந்தது? திருத்தத்ம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று கூறப்பட்ட தினத்துக்கு முதல் நாள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி திருத்தத்தை அவர்களில் பெருமளவானோர் எதிர்க்கின்றனர் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த 22 ஆவது திருத்தத்தைப் பிற்போட்டனர். இன்று நாட்டிலும் இல்லாத பஸில் ராஜபக்ச பொதுஜன பெரமுனவை நிர்வகிக்கின்றமையே இதற்கான காரணமாகும்.
கோப் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார பஸில் ராஜபக்சவின் பிரதிநிதியாவார். ஆனால் இந்த பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரே நியமிக்கப்படுவார் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம்.
இந்த நாடாளுமன்றத்திடமிருந்து எமக்கு பெரிதாக எதனையும் எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.
Discussion about this post