சீனாவைச் (China) சேர்ந்த வைத்தியர் ஒருவர் சுமார் 5000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நோயாளிக்கு நுரையீரல் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்தவகையில், சீனாவின் ஷாங்காயிலுள்ள (Shanghai) வைத்தியசாலை ஒன்றின் அறுவை சிகிச்சை நிபுணரான லூவோ கிங்குவேன் (Luo Qingquan) என்ற வைத்தியரே குறித்த அறுவை சிகிச்சையை நிகழ்த்தியுள்ளார்.
நோயாளி நாட்டின் எதிர் பக்கத்தில் அமைந்துள்ள காஷ்கரில் (Kashgar) இருந்தபோது, ஷாங்காயில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து மருத்துவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5G அறுவை சிகிச்சை ரோபோவைப் பயன்படுத்தி ரிமோட் மூலம் இயக்கி ஒரு மணி நேரத்தில் முழு அறுவை சிகிச்சையையும் செய்து முடித்துள்ளார்.
குறித்த சம்பவமானது கடந்த ஜுலை 13 ஆம் திகதி நிகழ்ந்துள்ள நிலையில், அதன் காணொளிகள் சமூக வலைதளங்கள் மற்றும் சர்வதேச ஊடங்களில் தற்பொழுது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், டெலிமெடிசின் (Telemedicine) மற்றும் ரோபோடிக் (Robotic) அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குறித்த வைத்தியசாலையில் ரோபோ அறுவை சிகிச்சையை நடத்துவதோடு, ரோபோ தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post