பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை (19) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடரும் நிலையில், நாடாளுமன்ற வளாகமும் சுற்றிவளைக்கப்படலாம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் நாளை விவாதிப்பதற்கு முன்கூட்டிய நிகழ்ச்சி நிரல் ஒதுக்கப்பட்டிருந்தாலும் , பெரும்பாலும் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை பற்றியே பெரும்பாலும் பேசப்படும் எனவும், இதனால் சபை நடவடிக்கைகள் கூடுபிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நாளைய தினம் பதவி விலகும் அறிவிப்பை சபையில் வெளியிடுவார். அத்துடன், அரசுக்கு ஆதரவு வழங்கிய இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட சாந்த பண்டாரவும் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
அரசியல் நெருக்கடி நிலை குறித்து எதிரணிகளும் கேள்விகளை தொடுக்கவுள்ளன .
அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் தொடரும். நாடாளுமன்ற வளாகத்தில் முக்கியத்துவம் மிக்க சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.
Discussion about this post