திருத்தங்கள் சகிதமே புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான புதிய சட்ட வரைவு பெப்ரவரி 10 ஆம் திகதி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி பல தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான தனது தீர்ப்பை உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. அப்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்.
உயர் நீதிமன்றத்தின் பொருட்கோடலுக்கு அமைய, குறித்த சட்டவரைவின் மூன்றாவது சரத்தானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அதைச் சட்டத்துக்குள் உள்வாங்க முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின், அந்தச் சரத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்.
சட்டவரைவின் நான்காவது சரத்தானது அமைச்சரால் குழுநிலை விவாதத்தின்போது திருத்தம் திருத்தம் செய்யமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, உயர்நீதிமன்றத் தீர்ப்பையேற்று, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றவே அரசு எதிர்பார்க்கின்றது.
Discussion about this post