ஜனாதிபதி பதவியில் இருந்து எந்தச் சூழ்நிலையிலும் கோத்தாபய ராஜபக்ச விலக மாட்டார் என்று நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பு இன்று அறிவித்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணி முதல் நாடாளுமன்ற அமர்வு நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இலங்கையில் 6.9 மில்லியன் மக்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி எந்தச் சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார் என்று கூறினார்.
அதேநேரம், நாடு முழுவதும் கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மக்கள் எதிர்ப்பை அடுத்து அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளனர்.
ஆயினும் பிரதமராகப் பதவி வகிக்கும் மஹிந்த ராஜபக்சவும், அவரது சகோதரரான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் பதவிகளை இறுகப் பிடித்தவண்ணம் உள்ளனர்.
Discussion about this post