மஹிந்த ராஜபக்ச தனது இரண்டு பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள துன்பத்தை அனுபவித்திருக்க வேண்டியதில்லை என்று மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசியல் செய்தால் விட்டுக்கொடுப்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். பதவிகளுக்குப் பேராசை கொண்டால் இதுபோன்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடும். சரியான நேரத்தில் பதவிகளில் இருந்து வெளியேறுவது முக்கியம்.
மஹிந்த ராஜபக்ச சுமார் 50 ஆண்டுகளாக நாட்டுக்காகப் பெரும் சேவையாற்றியுள்ளார். ராஜபக்சக்கள் 90 ஆண்டுகள் நாட்டுக்காகச் சேவையாற்றியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க அதிர்ஷ்டசாலி. 2015ஆம் ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, இன்று ஒரு ஆசனத்தில் பிரதமராகியுள்ளார்.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னரே அனைத்து வன்முறைகளும் நடந்தன. தவறான அறிவுறுத்தல்களே அதற்குக் காரணம். தாக்குதல் நடத்தியவர்களை ஏன் பொலிஸார் தடுக்கவில்லை என்பதும், ஏன் அவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பதும் மர்மமாக உள்ளது.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பியும், முன்னிலை சோசலிசக் கட்சியும் இருக்கின்றன. இது இரகசியம் அல்ல.
பொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்.- என்றார்.
Discussion about this post