21ஆம் திருத்தம் தொடர்பான கருத்தாடல்கள் அரசியல் அரங்கை சூடாக்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
அவர் நாளை 9 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகவுள்ளார் என்றும், அவர் பதவி விலகியதன் பின்னர் அது தொடர்பான விடயங்களை விளக்குவதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நாளை 11 மணியளவில் நடத்தவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வார இறுதியில் அவர் குறுகிய காலத்துக்கு அமெரிக்கா செல்லவுள்ளார் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக முழு நேர பணிகளில் ஈடுபடவுள்ளார் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
பஸில் ராஜபக்ச பதவி விலகினால் அந்த வெற்றிடத்துக்கு இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தம்மிக்க பெரோராவுக்கும், பஸில் ராஜபக்சவுக்கும் இன்று இரவு சந்திப்பொன்று நடக்கவுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Discussion about this post