ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள கோத்தாபய ராஜபக்சவும், மஹிந்த ராஜபக்சவும் கடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலைமையால் நாட்டின் அரசியல் நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
அமைச்சரவையைக் கலைத்து, இடைக்கால ஆட்சி ஒன்றை அமைப்பதன் ஊடாக தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச காய்நகர்த்துகின்றார் என்றும், பெரும்பான்மையை நிலைநாட்டி ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாள்களில் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துகளுக்குப் பின்னால் கோத்தாபய ராஜபக்சவின் காய்நகர்த்தல்கள் இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், நேற்று ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகக்கூடாது என்று மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
அங்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் நான் காணப்படுவதை உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அழுத்தங்களுக்கு அடிபணித்து ஒருபோதும் தான் பதவி விலகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது கோத்தாபய ராஜபக்சவின் காய்நகர்த்தல்களுக்கு மஹிந்த தரப்பு எடுத்த எதிர்நடவடிக்கையாகவே அரசியல் வட்டாரங்களில் நோக்கப்படுகின்றது.
மறுபுறத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே இன்று சந்திப்பொன்று நடக்கவுள்ளது. இந்தச் சந்திப்பில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு, தற்போது சுயாதீனமாகச் செயற்படுவோம் என்று அறிவித்துள்ள ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகப் பங்களிப்பை வழங்குகின்றனர் என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
அதேநேரம், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் நேற்று நாட்டின் பல இடங்களில் வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வரிசைகளில் காத்திருந்த மக்கள் ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Discussion about this post