பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி தபால் மூலம் அவர்களுக்கு பிரத்தியேக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பனாகொடையில் இன்று(11) பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தொழிற்சங்கவாதிகளால் நாட்டின் பொதுச்சட்டம் சவாலுக்குட்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியின் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு சவால் விடுத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
எனவே, அவர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்கவில்லை என்பதன் அடிப்படையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் அனைவரும் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி ரயில்வே பொதுமுகாமையாளரினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சுமார் 1000 பேருக்கு இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோரிக்கைகள் என்ற பெயரில் நாட்டு மக்களுக்கான சேவையை பலவந்தமாக பறிக்க முடியாதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயநலமாகவும் தான்தோன்றித்தனமாகவும் அரச சேவையை முன்னெடுத்துச்செல்ல முடியாதெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் இன்று(11) காலை பயணிக்கவிருந்த அலுவலக ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
இதனால் கொழும்பு, கம்பஹா ரயில் நிலையங்களுக்கு சென்ற பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்குள்ளாகினர்.
பணிப்பகிஷ்கரிப்பினால் நேற்று(10) மாத்திரம் 250 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதுடன் 60 ரயில் சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று முன்தினம்(09) நள்ளிரவு அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.
எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்களும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களும் பணிக்கு திரும்பாவிட்டால் சேவையை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே பதில் பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலிகே அறிவித்திருந்தார்.
ரயில்வே பொது முகாமையாளரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய அதிபர்களும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post