பங்ளாதேஷில் உள்ள 33 அகதிகள் முகாம்களில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா அகதிகள் வாழ்கின்றனர்.
மோசமான கூட்ட நெரிசல், வன்முறை, உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் என பல இன்னல்களுடன் அகதிகள் அந்த முகாம்களில் வாழ்ந்து வருவதாக பங்ளாதேஷுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் பிரிவுத் தலைவர் ஜோகனஸ் வான் டெர் கிளாவ் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த முகாம்களில் உள்ள குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் சட்டவிரோதச் செயல்களும் வன்முறை போன்ற நிகழ்வுகளும் அடிக்கடி நடப்பதால் அங்குள்ள குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
அனைத்துலக அளவில் உதவிகள் வேண்டும். இவர்களுக்கான கல்வி, வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். தங்கள் வாழ்க்கை, மற்ற நாடுகள் கொடுக்கும் நிதி உதவிகளைச் சார்ந்து இருப்பதை அகதிகளும் மாற்ற நினைக்கின்றனர்.
இதேவேளை, புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் குடிமக்களாகக் கருதப்படுவதில்லை. ரோஹிங்யா மக்கள் பங்ளாதேசைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் மியன்மாரில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
உலகளவில் நாடற்றவர்கள் பட்டியலில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். 2017 ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரோஹிங்யா மக்கள் ஆபத்தான காடுகளையும் நாஃப் நதியையும் கடந்து பங்ளாதேசுக்குள் நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
தற்போது பங்ளாதேஷில் முகாமிட்டுள்ள அகதிகள் நிரந்தரமாக அங்கிருக்கப் போவதில்லை என்பதால் அவர்கள் குடிசைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிதிப் பற்றாக்குறையால் அகதிகள் முகாமில் வாழும் ஒருவருக்குச் சராசரியாக மாதத்துக்கு 10 வெள்ளிதான் ஒதுக்கப்படுகிறது.
போதைப்பொருள், கொலை, ஆட்கடத்தல் போன்ற குற்றச்செயல்களும் முகாம்களில் நடக்கத்தொடங்கியுள்ளதால் அங்கு நிலைமை மோசமாகத் தொடங்கியுள்ளது. போதுமான அளவில் நிதி வரவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்” எனவும் தெரிவித்தார்.
Discussion about this post