நாட்டில் பொதுமக்கள் எரிபொருள் இன்றிப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், சொகுசு வாகனங்களின் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசு வாகனங்கள், அதியுயர் வலுக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் குளியாப்பிட்டியவில் இருந்து கற்பிட்டிவரை பேரணியாகச் சென்றுள்ளன. இந்தப் பேரணிக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
மாதம்பைப் பகுதி மக்கள் இந்தப் பேரணிக்கு வீதிகளை மறித்து எதிர்ப்பு வெளியிட்டனர்.
நாங்கள் டீசலைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் நிற்கின்றோம். டீசல் இல்லாது வருமானத்தை இழந்திருக்கின்றோம். வீடுகளில் வந்து பாருங்கள் எங்கள் குழந்தைகளைப் பாருங்கள். ஆனால் இவர்கள் சொகுசு வாகனங்களில் பிரதான வீதியில் பேரணி செல்கின்றார்கள்.
இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? பொலிஸார் கூறுகின்றனர் பெரிய இடத்தில் கொடுக்கப்பட்டது என்று. என்ன நடக்கின்றது நாட்டில்? என்று பொதுமக்கள் கொதிப்புடன் கூறியதுடன், பேரணியை இடைமறித்தனர். தளுவ சந்தியிலும் பௌத்த பிக்குகள் சிலரும் பொதுமக்களும் இந்தப் பேரணிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயினும் பொலிஸார் மேலதிக பாதுகாப்பு வழங்கி வாகனப் பேரணி தொடர வழி ஏற்படுத்தினர்.
சாதரண மக்கள் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோலுக்கு வரிசையில் நிற்கும்போது, இவர்களுக்கு மட்டும் எவ்வாறு டீசல் கிடைத்தது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Discussion about this post