பாராளுமன்ற உறுப்பினர்களின் சில உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களின் நீதிமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் ஒருசில நடவடிக்கைகளால் தமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்திலும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் தொடர்பிலேயே பிரதம நீதியரசர் இதனை அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் மக்களின் நீதிமன்ற அதிகாரம் பாராளுமன்றத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் மாத்திரம் நேரடியாக அந்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் நீதிமன்ற அதிகாரத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என சபாநாயகருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்கோள் ஆரம்பம் — நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை இலங்கை மக்களதும் எதிர்கால
சந்ததியினரதும் அனைத்து உலகவாழ் மக்களினதும் கௌரவம் மற்றும் சுபீட்சத்தை உறுதிப்படுத்தும் உரிமை என்பதை ஏற்றுக்கொண்டு, அதனை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தும் ஜனநாயக சோசலிச குடியரசாக இலங்கையை மாற்றுவதற்கு கௌரவத்துடன் உறுதிபூணுவதாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது– மேற்கோள் முடிவுபாராளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள கௌரவம் மக்களின் நலனையும் சட்டவாட்சியையும் பாதுகாப்பதற்கு தேவைப்படும் ஒரு அங்கம் என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, நீதிமன்றத்துடன் தொடர்புடைய சில விடயங்களை சுட்டிக்காட்டினார். பிரதம நீதியரசர் தவிர்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவு அரசியலமைப்பின் ஒரு அங்கம் என அவர் கூறினார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்ததுடன், சில நீதிமன்றங்களின் சம்பவங்கள் தொடர்பாகவும் விடயங்களை முன்வைத்தார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் தற்போதைய செயலாளரது நடவடிக்கைகளையும் நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
நீதி அமைச்சரின் இந்த கருத்துகள் தொடர்பில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் தொழில்சார் அமைப்பான நீதிச்சேவைகள் சங்கம் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி அறிக்கையொன்றின் ஊடாக பதிலளித்தது. நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் விமர்சிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற கருத்துகள் தொடர்பில் தமது சங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் கடிதத்தால் தமது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ சபாநாயகருக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்திருந்தார். 2 சுற்றுநிருபங்கள் உள்ளிட்ட விடயங்களை மேற்கோள்காட்டி நீதிபதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதில் உள்ள வரையறைகள் தொடர்பிலும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். பிரதம நீதியரசருக்கும் பிரதியிடப்பட்ட குறித்த கடிதத்தில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் கையொப்பமிட்ட நீதிபதிகள் இருவரையும் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்குமாறு நீதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நீதி அமைச்சர் முன்வைத்திருந்த விடயங்கள் தொடர்பாக பிரதம நீதியரசர் நேற்றைய திகதியில் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் பதிலளித்துள்ளார். இதனைத் தவிர நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதம நீதியரசரும் அதன் உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் ஈ.ஏ.ஜி.ஆர்.அமரசேகர ஆகியோரின் கையொப்பங்களுடன் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சபாநாயகருக்கு பிரத்தியேகமாக கண்காணிப்புகளை அனுப்பிவைத்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கும் நடைமுறை தொடர்பில் நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் விடயங்கள் தௌிவுபடுத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள 2 நீதியரசர்களுக்கான வெற்றிடங்கள் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி மற்றும் 2024ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதிகளில் ஏற்பட்டதாக பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்
உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பது தொடர்பில் நீதிமன்றம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியே இடைக்கால உத்தரவை பிறப்பித்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய வெற்றிடங்கள் ஏற்பட்ட நாள் முதல் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் வரையான காலப்பகுதியில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு சட்டத் தடையோ அல்லது அசௌகரியமோ இருக்கவில்லை என பிரதம நீதியரசர் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளை நியமிப்பதில் எவ்வித தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உத்தியோகபூர்வ நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டே நீதிச்சேவைகள் சங்கம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ள கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Discussion about this post