யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இ.அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கு விசாரணையின் போது, நீதிபதியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட அர்ச்சுனா, தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சமயத்தில், ஏனைய வைத்தியர்கள் சிலர் தொடர்பில் ஆதாரமற்ற அவதூறு பரப்பிய வழக்கில், இராமநாதன் அர்ச்சுனா இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.வழக்கு விசாரணையின் போது, தனது தரப்பு கருத்தை வெளிப்படுத்த விரும்புவதாக அர்ச்சுனா கோரியதையடுத்து, அவரை பேச நீதிபதி அனுமதித்தார்.நீதிபதியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட அர்ச்சுனா, தான் ஒரு நல்ல வைத்தியர், ஆனால் சட்டம் தெரியாது, தான் பேசுவதில் தவறிருந்தால் மன்னிக்க வேண்டுமென்றார்.
அப்படி சொல்ல முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, சட்டம் படிப்பதாகவும், எல்லா சட்டமும் தெரியுமென நீங்கள்தானே பேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார். பின்னர், அர்ச்சுனா பேஸ்புக்கில் எழுதுவதை போல சில விடயங்களை பேசினார்.அவற்றை தவிர்த்து, அவர் பேஸ்புக்கில் வைத்தியர்கள் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பான ஆதாரங்களை முன்வைக்குமாறு நீதிபதி குறிப்பிட்டார்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனா பேச முற்பட, அதைப்பற்றி அல்ல, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தொடர்பில் பரப்பப்பட்ட தகவல்களுக்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு நீதிபதி குறிப்பிட்டார்.
அந்த ஆதாரங்களை முன்வைக்க பயமான உள்ளது. நீங்கள் (நீதிபதி) வைத்தியர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினீர்கள் என அர்ச்சுனா குறிப்பிட்டார்.அர்ச்சுனா வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் யாரும் தம்மிடம் முறைப்பாடு செய்யவில்லையென சாவகச்சேரி பொலிசாரும் தெரிவித்தனர்.ஏற்கெனவே 4 தவணைகள் கடந்தும் முன்வைத்த தகவல்கள் தொடர்பில் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லையென குறிப்பிட நீதிபதி, அதற்கு பதிலாக நீதிபதி, பிணையாளிகள், வழக்காளிகள் என அனைவர் மீதும் பேஸ்புக் ஊடாக சேறடிப்பையே மேற்கொள்வதாக தெரிவித்தார். அது தன்னுடைய பேஸ்புக் இல்லையென அர்ச்சுனா தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். அர்ச்சுனாவை ஒக்ரோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
Discussion about this post