ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் இழுபறியில் உள்ள நிலையில், சிறிலங்காவுக்கான வெளிநாட்டு உதவிகளில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்று அறிய முடிகின்றது. அதனால் தேர்தல் ஒன்றை நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகலாம் என்று எதிர்கூறப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கை தற்போது எட்டப்பட்டுள்ளபோதும், நிலையான அரசாங்கம் இன்மையால், உடன்படிக்கையின் உண்மையான வாய்ப்புக்களை சிறிலங்கா அடையமுடியாமல் போகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமையால் கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் என்று அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டபோதும், இதுவரை சாதகமான பதில் எதுவும் ஜனாதிபதிக்குக் கிடைக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.
மறுபுறுத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதான அமைச்சுக்களைத் தம்வசம் கோருவதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குக் கட்சிகளுடன் பேச்சுக்களைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களை இது தடுக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.
சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமானால் அந்த அரசாங்கத்துக்குள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கை ஓங்குவதை ஏனைய கட்சிகள் விரும்பாது என்கின்ற நிலையில், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுக்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. இந்த நிலைமைகளால் ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தொங்குபறி நிலைமையால் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதில் ரணில் விக்கிரமசிங்க சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். அரசியல் உறுதிப்பாட்டை குறுகிய காலத்தில் அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் தேர்தல் ஒன்றை நாடு சந்திப்பதனூடாகவே நிலையான அரசாங்கமொன்றை ஏற்படுத்தமுடியும். தென்னிலங்கையில் தற்போது உருவாகும் கூட்டணிகளும் தேர்தலை நோக்கியே அமைக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post