பொதுவாகவே கீரையில் ஏகப்பட்ட சத்துக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக வல்லாரை இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்களை கொண்டது.
மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் வல்லாரை பெரிதும் துணைப்புரிகின்றது.
மனித மூளை நன்கு செயல்பட தேவையான அனைத்து சத்துக்களும் இந்த வல்லாரையில் செறிந்து காணப்படுகின்றது.
ரத்தசோகை உள்ளவர்களுக்கு அருமருந்தாக இருக்கும் இந்த வல்லாரை மன அழுத்தத்தை போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த வல்லாரையை பயன்படுத்தி எவ்வாறு சுவையான சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வல்லாரைக் கீரை – 1கட்டு
பெரிய வெங்காயம் – 1
துருவிய தேங்காய் – 1தே. கரண்டி
புளி – சிறிதளவு
வரமிளகாய் – 3
பூண்டு – 5 பல்
கடலைப் பருப்பு – 2 தே. கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தே. கரண்டி
பெங்காயத் தூள் – 1 பின்ச்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 1/2 தே. கரண்டி
கடுகு – 1/2 தே. கரண்டி
உளுத்தம் பருப்பு – 1தே. கரண்டி
செய்முறை
முதலில் வல்லாரைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக ஆய்ந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள வல்லாரையை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு புளி சேர்த்து மிதமாக வதக்கி அதனை ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து கொள்ள வேண்டும்.
அரைத்து வைத்துள்ள சட்னியில் இந்த தாளிப்பை சேர்த்து கலந்து விட்டால் ஆரோக்கியம் நிறைந்த வல்லாரைக் கீரை சட்னி தயார்.
Discussion about this post