இன்று அல்லது நாளை நிதியமைச்சராகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிதியமைச்சராகக் கடமையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்னர் நிதி அமைச்சர் இதுவரை நியமிக்கப்படவில்லை. நிதியமைச்சர் பதவியை ஏற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கடந்த அரசாங்கத்தில் நிதியமைச்சராகப் பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, மீண்டும் நிதியமைச்சராகப்ப பதவியேற்க மறுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நிதியமைச்சராகப் பொறுப்பேற்க அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அவரும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அதனால் நிதியமைச்சரை நியமிப்பது இழுபறி நிலையிலேயே உள்ளது.தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்களால் நிதியமைச்சரை உடனடியாக நியமிக்க வேண்டிய தேவை உள்ளதால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே நிதியமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது. இன்று அல்லது நாளை அவர் பதவியேற்பார் என்றும் அறியமுடிகின்றது.
Discussion about this post