பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
6 தடவைகள் பிரதமராகப் பதவி வகித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் பொறுப்பு வகிப்பது அவரது அரசியல் வாழ்க்கையில் இதுவே முதன்முறையாகும்.
இன்று முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.
முன்னதாக, நிதி அமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காத நிலையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நிதி அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post