பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை தனது பதவியில் இருந்து விலகக் கூடும் என்று கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியிருப்பதாலும், மாநாயக்க தேரர்களின் அழுத்தம் காரணமாகவும் மஹிந்த ராஜபக்ச இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு அவசர சந்திப்பொன்று நடந்துள்ளது.
அந்தச் சந்திப்பில் பஸில் ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பிலும் இடைக்கால அரசாங்கம், பிரதமர் பதவி தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய விலகியுள்ளமையும் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற வேண்டும். அதில் அரசாங்கத்துக்குத் தோல்வி ஏற்பட்டால் பெரும் பின்னடைவாக அமையும்.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார் என்று அறிய முடிகின்றது. ஆயினும் இந்த விடயத்தில் ஜனாதிபதியின் மீதும் அவர் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மஹிந்த ராஜபக்ச கடும் அதிருப்தியில் உள்ளார் என்றும் அறிய முடிகின்றது.
Discussion about this post