நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் விளையாட்டுத் துறை அமைச்சுப் பதவியை ஏற்க வேண்டும் என்று சில தரப்புக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
விளையாட்டு சங்க அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் நாமல் ராஜபக்சவைச் சந்தித்தபோதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர் என்று கூறப்படுகின்றது.
விளையாட்டுத்துறையை தன்னிச்சையாக கட்டுப்படுத்த அமைச்சு தயாராகி வருகின்றது என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், சரியான திட்டமிடல் மற்றும் எதிர்கால பார்வை இன்றி இலங்கையில் விளையாட்டுகள் தற்போது வழி தவறிச் செல்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் நாமல் ராஜபக்ச விளையாட்டுத் துறை அமைச்சை மீளப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் கோரினர் என்றும், ஆனால் அமைச்சுப் பதவியை ஏற்பதற்குத் தனக்கு விருப்பமில்லை என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை, தற்போது ராஜபக்ச குடும்பத்தினர் அமைச்சுப் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட நாடகம் இதுவென்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post