தென் கொரியாவில் ஒளிபரப்பாகும் ‘மை கோல்டன் கிட்ஸ்’ என்ற பிரபல நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஓர் அங்கம் தற்போதும் குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகளின் மனநிலை குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘மை கோல்டன் கிட்ஸ்’ என்பது பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.
கடந்த நவம்பர் 21ஆம் திகதி குறித்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஓர் அங்கம் அனைவரையும் அதிர வைப்பதாக இருந்தது.
குறித்த தினத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவன் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.
அந்த காணொளியில் 4 வயதான கியூம் ஜி-யூன் என்ற சிறுவன் வெளியிட்ட ஆதங்கம் அனைவரின் மனங்களையும் நெகிழ வைப்பதாக இருந்தது.
குறித்த காணொளியில் கியூம் ஜி-யூன் என்ற சிறுவன் தனது பெற்றோர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது மனமுடைந்து அழத்தொடங்கினார்.
தான் வீட்டில் தனிமையில் தவிப்பதாகத் தெரிவித்தார். சிறுவனிடம் “உனக்கு அப்பா, அம்மா இருவரில் யாரைப் பிடிக்கும்” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அந்த சிறுவன், “எனக்கு தெரியவில்லை, வீட்டில் நான் எப்போதும் தனியாகத் தான் இருப்பேன். என்னுடன் யாரும் விளையாட மாட்டார்கள், தனியாகவே எப்போதும் இருப்பேன்” என்றார்.
அப்பா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த இந்த சிறுவன் தனது தந்தை கோபமாக இருக்கும் போது அச்சுறுத்தும் வகையில் இருப்பார் என்றும் எனினும் அவர் தன்னுடன் அன்பாகப் பேச வேண்டும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார்.
தாய் குறித்து கேட்ட போது, “அவருக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன்” என்று அந்த சிறுவன் கண்ணீருடன் கூறினார்.
“என் அம்மா நான் கூறுவதை எப்போதும் கேட்டதே இல்லை. எனக்கு அவருடன் விளையாட வேண்டும் என ஆசைதான், ஆனால், அவர் எப்போதும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பார்.
ஒரு முறை நான் கலை சார்ந்த பள்ளியில் படிக்க வேண்டும் என கேட்டேன், அதற்கு என் அம்மா, நான் பார்க்க அழகாக இல்லை என்றும் இதனால் கலை பள்ளிக்கெல்லாம் அனுப்ப முடியாது” என்று கூறினார்.
இந்த காணொளி இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவே சாட்சி என்றும் பலரும் தனது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
அந்த சிறுவனுக்கு இருந்த முதிர்ச்சியில் சிறியளவில் கூட அவர்கள் பெற்றோருக்கு இல்லை என்று பலரும் சாடியுள்ளனர்.
Discussion about this post