கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதிபர் வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பதில் நிதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“G77 குழு + சீனா” அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அவர், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு பயணமாகவுள்ளார்.
Discussion about this post