மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி நேற்று நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் விலவாசி உயர்வு, எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாட்டுடன் தற்போது நீண்ட நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நேற்று தொலைத் தொடர்பு வலையமைப்புக்களும் தடைப்பட்டிருந்தன.
நாட்டின் நெருக்கடி நிலைமையால் வாழ்க்கையைக் கொண்டு நகர்த்த முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் தன்னிச்சையாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
மக்களின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சில இடங்களில் போக்குவரத்துத் தடைப்பட்டது என்று அறிய முடிகின்றது. அதேவேளை, எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் துண்டிப்புக் காரணமாக பல நகரப் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன.
காலி – கொழும்பு பிரதான வீதியின் பம்பலப்பிட்டி பகுதியில் வீதியை மறித்து நேற்று முற்பகல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டி, அம்பலாங்கொட, உடவளவ, ஹொரணை, கொள்பிட்டி உட்படப் பல இடங்களில் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களைப் பாடசாலைகளை அழைத்துச் செல்வதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது என்று கூறப்படுகின்றது.
பாடசாலைச் சேவையில் ஈடுபடும் பல வாகனங்கள், டீசல் இல்லாததால் சேவையை நிறுத்தியுள்ளன என்று தெரியவருகின்றது.
Discussion about this post