நாட்டு மக்களின் பிரச்சினை தொடர்பாகச் சிறந்த புரிதல் உள்ளது. அந்தப் பிரச்சினைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி கொலோன்ன பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு மிகவும் கஷ்டமான நிலைமையில் இருக்கும் நேரம் என்பது உங்களுக்கு தெரியும். ஒருபுறம் கொரோனா தொற்று நோயை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
கொரோனாவை நாங்கள் மிக வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அதேபோல் வேறு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள காலத்தில் நாம் இருக்கின்றோம். அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை.
அதைச் செய்ய அரசாங்கம் தயாராக இருக்கின்றது. கிராமங்கள், பிரதேசங்கள் முன்னேற்றமடைய வேண்டுமாயின் வீதிகள், மின்சாரம், குடிநீர் வசதிகளை வழங்க வேண்டும். படிப்படியாக ஒவ்வொன்றாக எடுத்து வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. நாங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் புரிதல் உள்ளவர்கள்.
நாட்டு மக்களின் தேவைகளை அறிந்த தரப்பினரே தற்போது ஆட்சியில் உள்ளனர். ஒரே தடவையில், ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் அல்லது ஒரு வருடத்தில் அனைத்தையும் செய்ய முடியாது. ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்காக மக்களின் ஒத்துழைப்பு எமக்கு தேவை என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post