நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya ) தெரிவித்துள்ளார்.அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இன்று (03) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சின் அதிகாரிகள்
இக்கலந்துரையாடலில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள், நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு விளக்கியுள்ளனர்.
சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையில் வெளிப்படைத்தன்மை, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம், ஏற்றுமதிப் பொருட்களின் நிலை மற்றும் தரம், கைத்தொழில் முயற்சியாளர்களின் திட்டங்களுக்கு கடன் வழங்குதல், கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தொடர்ந்து வழங்குதல் மற்றும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் போன்ற விடயங்கள் குறித்து அமைச்சு அதிகாரிகளுடன் பிரதமர் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
Discussion about this post