மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களில் இன்று(05) இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
களு கங்கையின் நீரேந்துப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வௌ்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் களு கங்கையை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கிங், நில்வலா கங்கைகள் தொடர்ந்தும் பாரியளவிலான வௌ்ள அபாய மட்டத்திலேயே உள்ளன.
அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு வௌ்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் நேற்று(04) பிற்பகல் தெரிவித்திருந்தது.
அத்தனகலு ஓயாவின் நீரேந்துப் பகுதிகளில் நிலவும் வௌ்ள அபாயம் தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கம்பஹா, ஜாஎல, கட்டான, வத்தளை, மினுவாங்கொடை பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் இடர்முகாமைத்துவப் பிரிவின் பொறியியலாளர் சகுரா தில்தாரா தெரிவித்தார்.
Discussion about this post