அநுர குமார திசாநாயக்க அரசியல் எண்ணங்கள் சரியாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் அவர்களது கோட்பாடுகள் தெளிவாக இல்லை. தவிர அநுரவின் தலைமைக்கு ஜேவிபியினர் கட்டுப்படுவதாக தெரியவில்லை.
அதனாலேயே ஆளுக்கொரு கருத்தை முன்வைத்து வருகிறார்கள். ஒரு அரசியல் கட்சி, தலைமையின் நெறிப்படுத்தலில் ஒரே விதமான கருத்துகளை முன்வைக்க வேண்டும். அது என் பி பி கட்சியில் தெரியவில்லை. என் பி பி என்பது ஜேவிபியின் இன்னொரு முகமே தவிர, அது இன்னொரு கட்சி அல்ல.
ஜேவிபியில் அனைவராலும் இணைந்து கொள்ள முடியாது. ஆனால் என் பி பி யில் எவரும் இணைந்து கொள்ள முடியும். இது திட்டமிடப்பட்ட ஏமாற்று அரசியல் கண்ணாம்பூச்சி ஆட்டம். என் பி பி என வெளியில் சொன்னாலும் அடிப்படையில் மறைமுக தலைவர்களான ஜேவிபி தலைமையின் கட்டுப்பாட்டை அநுரவினால் மீற முடியாது. எனவே வெளிப்பார்வைக்கு இனிப்பாக இருந்தாலும், அதன் பின்னால் கசப்பான ஒரு நிலைக்கு நாட்டு மக்கள் தயாராக இருக்க வேண்டும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல இதுவும் ஒன்றுதான்.
தவிர அவர்களது பொருளாதாரக் கொள்கைகளில் தெளிவான முன்மொழிவுகள் இல்லை. ஊழல் மற்றும் இனவாதம் குறித்த போக்குகளுக்கு எதிராக இருப்பது போல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும், அதை 100% உண்மையாக எண்ண முடியவில்லை.
இதுவரை அவர்களது சொத்துக்கள் குறித்து எவ்வித ட்ரான்ஸ்பரன்சி, வெளிப்படையான அறிக்கைகளும் இல்லை. அதேபோல யாழில் அனுர குமாரவின் பேச்சு, ஜனநாயக ரீதியான பேச்சாக தெரியவில்லை. அங்கு சிங்கள இனவாதம், தெற்கின் எண்ணம் என சொல்லப்பட்டது. அதற்குள் தெரிந்தது எங்களுக்கு நீங்கள் அடிமை என்ற ஒரு எண்ணமே. அவரது பேச்சு தொனியும் அதையே உணர்த்தியது, இது ஆபத்தானது.
அதேபோல ஜேவிபியினர் நினைப்பது போல திருடர்களையோ அல்லது எதிரிகளான அரசியல்வாதிகளியோ தண்டிப்பது இலகுவானது அல்ல. அப்பாவிகள் மாட்டிக் கொள்வார்கள், சுறாக்கள் தப்பி விடுவார்கள். திருடர்கள், திருடிய பணத்தை வீட்டுக்குள் வைத்துக் கொண்டு இருப்பதில்லை. அவர்கள் எப்போதோ வெளிநாடுகளில் பதுக்கி வைத்து விட்டார்கள்.
அவன் சரியில்லை என்றால், இவனோடும், இவன் சரி இல்லை என்றால், அவனோடும் மாறி மாறி வாக்களித்த இந்த மக்கள், இம்முறை இவர்கள் எவரும் சரியில்லை. எனவே, புதிய ஒருவருக்கு கொடுத்து பார்க்கலாமே என்பது விஷ பரீட்சை தானே தவிர, விவேகமான முடிவு அல்ல. அதை மக்கள் அனுபவித்து தான் உணர வேண்டும். அந்த தருணத்திற்காக காத்திருப்போம்.
சஜித் அரசியலில் நமக்கு புதியவர் அல்ல. கடந்த காலங்களில், அவர் சரியான முடிவுகளை எடுத்தவராக தெரியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில், அவருக்கு இருந்த ஆதரவை இழக்க காரணம், அவர் தனது குடும்பத்தினரது சொல் கேட்டு செயல்பட்டது ஆகும். அதுவே தொடர் கதையாக உள்ளது.
அவரோடு சிறந்த அரசியல்வாதிகளும், சிந்தனைவாதிகளும், இருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன சொன்னாலும், அடுப்பறை முடிவே அவரது இறுதி முடிவாக ஆகிவிடுவது அவரது அரசியல் பலவீனம்.
உங்களுக்கு நினைவு இருக்கிறதோ தெரியாது, மைத்திரிக்கும், ரணிலுக்கும் இடையே ஒரு ஈகோ போர் நடந்து கொண்டிருந்தது. அதற்கு காரணம் மைத்திரிக்கு உலக அரசியல் தெரியாது. ரணிலுக்கு கிராம அரசியல் புரியாது.
ரணில் எதிர்கால இலங்கையை உருவாக்க எண்ணினார். மைத்திரியோ, எண்ணியே பார்க்க முடியாத ஒரு தலைமை கிடைத்த போது, தலைகால் புரியாமல் சாட்டையை கையில் எடுத்து ஆடினார். வயலை எரித்த மைத்ரி நாட்டையும் எரித்தது வரலாறு.
ஆங்கிலமே புரியாத மைத்திரி, கெபினட் எடுத்த தீர்மானங்களை, அடுத்த நாள் பத்திரிகையில் பார்த்தே புரிந்து கொண்டார். உதாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு Tap போன்றவற்றை கொடுப்பதையே ஏற்றுக்கொள்ளாதவராக இருந்தார்.
கொரோனா காலத்தில், பள்ளி மாணவர்கள் இணையத்தின் மூலமே கல்வி கற்றார்கள். அதைக் கூட விளங்கிக் கொள்ளாத அறிவில்லாத ஒரு ஆள்தான் மைத்திரி. அதற்கு மேல் அவர் குறித்து பேசுவது கால விரயம் தான்.
அவரே 33 முறை சஜித்தை பிரதமராக்க அழைத்தும், இவர் அந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல கோட்டா அழைத்தும், அவர் பின்னடித்தாரே தவிர, அதை சவாலாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அவரது அரசியல், அவரது தந்தையின் வழியில் செல்லும் விளம்பர கவர்ச்சி அரசியல். அதாவது பப்ளிசிட்டி பாலிடிக்ஸ். வெளிப்படையாக மக்களை கவர, தொடர்ந்து செயல்படுவது காணக்கூடிய ஒன்று, ஆனால் தோல்விகளை தாங்க கூடியவர் அல்ல.
அதே நேரம் பிரச்சனைகளை சமாளிக்க போராடக் கூடியவரும் அல்ல. இதுவே அவருக்குள்ள அடிப்படை பிரச்சனை. கடந்த ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின் ஒரு வாரம் காணாமல் போன ஒரு மனிதர் சஜித்.
பொதுவாக அணுரவும், சஜித்தும் , கோட்டா அழைத்தபோது ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை தெரியுமா?
அதை ஏற்றால் சில காலம்தான் நாட்டை ஆள முடியும். (இன்றைய ரணில் ஆளும் 2 வருடங்கள் போல) அதற்குள் தங்களால் சரியாக ஆட்சி செய்ய முடியாவிட்டால், அதன்பின் அவர்களுக்கு வாழ்கையில் அரசியலே செய்ய முடியாமல் போய்விடும். அதை நினைத்தே ஓடி ஒழிந்தனர்.
அரசு ஒன்று கவிழும் போது எதிர்க் கட்சி ஆட்சியை பொறுப்பேற்பது மரபு. ரணில் ஏற்ற பின் வெளியே வந்து வெட்டி சண்டியர் போல சிலாவரிசை கதை வேற?
ஆட்சி முழுமையாக கவிழட்டும் , புதிதாக தேர்தல் வைத்தால் தங்களால் வர முடியும் என கனவு கண்டதே அவர்களது அரசியல். அப்படி தேர்தல் மூலம் வந்தால், என்ன பிரச்சனை வந்தாலும் 5 வருடங்களுக்கு அவர்களால் இருக்க முடியும். இடையில் துரத்த முடியாது.
அந்த 5 வருடங்களை நினைத்தே, குறுகிய கால பிரதமர் பதவியை எடுத்து, நாட்டை நிர்வகிக்க கிடைத்த சவாலை அணுர – சஜித் ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மக்கள் வேதனைப்படும்போது ஓடி ஒளிந்த தலைவர்கள் தான் இவர்கள் இருவரும். இவர்கள் இதுவரை, ஏன் அன்றைய காலகட்டத்தில் நாட்டை பொறுப்பேற்கவில்லை என இதுவரை பகிரங்கமாக சொன்னதே இல்லை.
அத்தகைய கோழைகளே இவர்கள், அதற்கு மேல் இவர்களைப் பற்றி வேறு கணிப்பு தேவையில்லை. அன்றைய காலகட்டத்தில் நாட்டை பொறுப்பேற்காத காரணத்தை கேளுங்கள் ? பதில் சொல்ல மாட்டார்கள்!
ரணில், திருடனோ அல்லது கிழவனோ அல்லது நரியோ, வேறு எவனாகவும் இருக்கலாம், ஆனால் மக்கள் வீதிகளில் செத்து மடியும் போது, நாட்டை பொறுப்பேற்று, மக்களை நிம்மதியாக வாழ வைத்த ஒருவன்தான் ரணில் என்பதில், உங்களில் எவருக்காவது மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.
தனி ஒரு மனிதனாக, எவ்வித ஆதரவும் இல்லாமல், ஒரு நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஆள்வது என்பது ஒரு சர்வாதிகாரியால் மட்டுமே முடிந்த ஒரு விடயம்.
ரணில் பார்வைக்கு அகிம்சா வாதியாக இருந்தாலும், உண்மையில் ரணில் ஒரு சர்வாதிகாரியே என்பது தெரிந்தவர்களுக்கு தெரியும்.
நாட்டை மீட்ட மஹிந்தவால், கட்டுப்படுத்த முடியாத மக்களையும், படையினரையும் கட்டுப்படுத்திய அசாத்திய துணிச்சல் ரணிலுக்கு மட்டுமே இருந்தது.
போரை வென்ற ஒரு சரத் பொன்சேகாவால் கட்டுப்படுத்த முடியாத முப்படையினரை, தன் ஆனைக்குள் கொண்டு வந்து செயல்பட வைத்த திறமை ரணிலுக்கு மட்டுமே உரியது.
பயங்கரவாதத்தை ஒழிக்க கங்கணம் கட்டியவர் என புகழப்பட்ட கோட்டாவால் முடியாமல் போய் தலை தெறிக்க ஓடிய, ஒருவரை மீண்டும் அழைத்து உட்கார வைத்து, அவரை ஆட்சி செய்த நாட்டை அமைதி வழிப்படுத்திய அந்த அசாத்திய கம்பீரம் ரணிலிக்கே உரியது.
மகிந்த குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு ஓட விட்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் வெளியில் போய் நாட்டை நாசமாக்க அவர்களது பணத்தை வைத்து படு பாதக செயல்களை செய்வார்கள்.
எனவே நாட்டுக்குள் அழைத்து வைத்துக் கொண்டால், அவர்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. காரணம் அவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.
வெளியில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் போல எதையும் இப்படியானவர்கள் வெளியிலிருந்து சர்வ சாதாரணமாக செய்ய முடியும், ஆனால் நாட்டுக்குள் இருந்து அது போல இனியும் அப்படியான விடையங்களை செய்ய முடியாது. எனவே எதிரியை முன்னாள் உட்கார வைப்பது, அவனை பதுங்க வைப்பதை விட சரியான அணுகுமுறை.
ஐரோப்பிய நாடுகள், பொதுவாக இது போன்ற விடயங்களை செய்து வருகிறார்கள். உதாரணமாக பயங்கரவாத இயக்கங்களை, நாட்டுக்குள் வெளிப்படையாக சுதந்திரமாக வேலை செய்ய விடுவார்கள். அவர்களை அண்ட கிரவுண்டுக்குள் பகுங்கி போக விட மாட்டார்கள்.
காரணம் வெளிப்படையாக இருக்கும் போது, அவர்களை அவதானிப்பது இலகுவானது. இது ஐரோப்பிய புலனாய்வுகளோடு நெருக்கமானவர்களுக்கு தெரிந்த ஒரு விடயமாகும். அதற்கு மேல் இதுகுறித்து விலாவாரியாக இங்கு எழுத விரும்பவில்லை.
அதேபோலத்தான் மோசமானவர்களை முன்னாள் உட்கார வைத்தால் அவர்களால், அத்துமறி எதையும் செய்ய முடியாது. சுதந்திரம் என்பது இப்படியும் ஒன்றுதான். அடிமைப்படுத்துவது சுதந்திரம் அல்ல, அது கிரிமினல்களை உருவாக்க வழி செய்வதாகும்.
ஆட்சியாளர்களை அடித்து விரட்டிய அரயகலய போராளிகளை , அடக்கிய விதமும் ரணிலின் சமயோசித அரசியலாகும். தவிர வங்குரோத்து ஆன ஒரு நாட்டை அதிலிருந்து மீட்டு இதுவரை முன்னேற்ற உலக அரசியலில் உள்ள அனைத்து ஓட்டைகளுக்குள்ளும் புகுந்து விளையாடி மக்களை இதுவரை பசி பட்டினி இல்லாமல் வாழ வைத்திருப்பது ரணிலின் அனுபவ அரசியல் தான்.
அது இன்றைய நிலையில் இருக்கும், எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இல்லை. இன்று நாடு முழுமையான விடிவை நோக்கி சென்றதாக கருத முடியாது.ஆனால் பாதி தூரம் சென்ற வழிப் பயணத்தில், மீதி பயணத்தை செல்லவிடாது, ரணிலை நாடு இழுக்குமாக இருந்தால், மீதி காலத்தை இலங்கை காரிருளில் கழிக்க வேண்டி வரும். அது எப்போது மீளும் என சொல்ல முடியாது!சிங்கப்பூர் நாடு விடிவு பெற்றது ஓரிரு வருடங்களில் அல்ல. பல கால போராட்டம், பலகால வறுமை, ஒரு தலைவனின் சிந்தனை, அவனது பிடிவாதம், அவனது ஆக்ரோஷம், அவனது நேர்மை, அவனது விவேகம், அவனது நாட்டு பாசம். அதுவே தந்தை லீ உருவாக்கிய சிங்கப்பூர்.அதுபோல ஒரு நாடாக இலங்கையை உருவாக்க முடியும். காலம் கழிந்து விடவில்லை, மக்கள் சில விடயங்களை பொறுத்தே வேண்டும், அவசரத்தில் அவரவர் தேவைகள் முக்கியம் என்றால், அது ஒரு நல்ல தேசத்தை உருவாக்காது. அது இன்னொரு அரைகுறை பிரசவ தேசமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது.ரணிலால் தொடங்கியதை , எதிர்காலத்தில் இளையவர்களான அநுர – சஜித் போன்றோர் தொடரலாம், தொடர வேண்டும். நாடு ஒன்றும் உறுதி எழுதப்பட்ட காணியல்ல! ஆனால் இன்று அநுர – சஜித் இருவருக்குமான நேரமல்ல.இன்னொரு முக்கியமான விடயம், ரணில், ஒரு இனவாதியும் அல்ல, மதவாதியும் அல்ல. அவர் அதை பகிரங்கமாக சொன்னவரும் அல்ல. ஆனால் அதுவே அவரது அரசியல் தலைமைக்கான பலவீனமாக இருந்து வந்தது. அதுவே இன்னமும் தொடர்கிறது.அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ எதிர்கால இலங்கையை கட்டி எழுப்ப விரும்பினால், இம்முறை ரணிலை ஜனாதிபதியாக தேர்வு செய்வது மக்களின் கடமையாகும். ரணிலின் கடமையை செய்ய அவர் தயாராக இருக்கிறார், ஆனால் மக்கள் தயாரா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும்? என கருத்தை முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post