இன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ. செல்வராசா கஜேந்திரன் பொலிசாரால் கைது.தமிழின விடுதலைக்காக, காந்திய வழியில் தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ. செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்றையதினம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
சர்வதேச நியமங்களுக்கும், பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கும் அமைவாக, விதித்துரைக்கப்பட்ட சிறப்புரிமைகளுக்கு உரித்துடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், தன் இனத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகச்செம்மல் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ. செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்றைய தினம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வன்மையாக கண்டித்துள்ளார்.
அவர் தனது கருத்தை “ஆயுதமுனையில் அதியுச்ச வன்முறைப் பிரயோகங்களோடு கைது செய்யப்பட்டுள்ளமை இந்த அரசின் கோர முகத்தை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது, அவரது சிறப்புரிமைகளை மீறும் வகையில், இந்த ஜனநாயக நாட்டில் இத்தனை மோசமான அரசவன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமையானது, இங்குள்ள சாதாரண தமிழர்களின் இயல்புவாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை தெட்டத்தெளிவாக எண்பித்துள்ளது.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களை, ஒரு குற்றவாளியைப்போல் வலுக்கட்டாயமாக பொலிசார் கைதுசெய்தமைக்கு எனது வலுவான கண்டனங்களைப் பதிவுசெய்வதோடு, அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் .
Discussion about this post