ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வில் நேற்றுக் கலந்துகொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் “கோ ஹோம் கோத்தா” என்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்துக்கும், தனக்கும் எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொதுவெளியில் தென்படாதிருந்த நிலையில், நேற்று நாடாளுமன்றம் வந்திருந்தார்.
முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில், 10.05 மணியளவில் ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்தார். எதிரணியினர் தமது ஆசனங்களிலிருந்து திடீரென எழும்பி ‘கோ ஹோம் கோத்தா’ என ஜனாதிபதிக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் சபை அமர்வுகள் தடைப்பட்டன.
சபை அமர்வைத் தொடர்ந்து கொண்டு நடத்த முடியாததால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபை அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை, ஜனாதிபதியை நீண்ட நாள்களாக வெளியில் காணவில்லை என்றும், அவர் எங்கே இருக்கின்றார்? அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? என்பதையாவது அரசு கூற வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் அரசிடம் கோரியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வாய்மூல விடைக்கான கேள்விகளின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும்போதே நளின் பண்டார இவ்வாறு கோரியிருந்தார்.
இந்த நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்து அமர்வில் கலந்துகொண்டார்.
Discussion about this post