நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்துக்கும் அதிகாரங்களை பகிரும் வகையிலான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் நல்லாட்சியின்போது நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டம், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின்கீழ் இல்லாதொழிக்கப்பட்டது. இதற்காக 20 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டது. ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டன.
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் எழுச்சியை ஏற்படுத்திய பிரதான காரணிகளுள் இந்த 20 ஆவது திருத்தச்சட்டமூலமும் ஒன்றாகும்.
எனவே, 20 இல் உள்ள ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான அதிகாரங்களை நீக்கிவிட்டு, 19 இல் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்கென 27 ஆம் திகதி முன்வைக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர் அச்சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள்மீதான உயர்நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் வெளியான பின்னர், நாடாளுமன்றத்தில் 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் இடம்பெறும்.
குழுநிலை விவாதத்தின்போது தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, சட்டமூலம் நிறைவேற்றப்படும். இது அரசமைப்பை திருத்துவதற்கான சட்டமூலம் என்பதால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம்.
அதேவேளை, 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து திருப்திகொள்ள முடியாது, அது 19 ஐ ஈடுசெய்யும் வகையில் அமையவில்லை என எதிரணிகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வகிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பு அமைச்சின்கீழ்வரும் திணைக்களங்கள் வரையறுக்கப்படவில்லை. எனவே, தனக்கு தேவையான நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
Discussion about this post